திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் பிருத்விராஜ் இயக்கத்தில் 'எல் 2 எம்புரான்' படத்தில் நடித்துள்ளார்.
அனுராஜ் மனோகர் இயக்கும் 'நரி வேட்டை' என்ற படத்தில் டோவினோ தாமஸ் நடித்துள்ளார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் சேரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மலைவாழ் மக்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் அதிகாரத்தை கேள்வி கேட்கும்படியான காட்சிகள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. "நரிவேட்டை" படம் கடந்த 23ம் தேதி வெளியானது. திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாகியுள்ளது. டோவினோ தாமஸ் நடித்துள்ள 'நரிவேட்டை' திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் வன்முறைக் காட்சிகள் இருப்பதால், இப்படம் மீண்டும் தணிக்கைச் செய்யப்பட்டு சில முக்கிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. .இதையடுத்து, அப்படி எந்தவொரு காட்சிகளும் நீக்கப்படவில்லை எனவும், பிரபல ராப் பாடகரான வேடனின் பாடல் ஒன்று தணிக்கைச் செய்யப்பட்டு தற்போது இணைக்கப்பட்டுள்ளது எனவும் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் சினிமா கம்பனி விளக்கமளித்துள்ளது.
View this post on Instagram
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "அன்பான நேயர்களே, 'நரிவேட்டை' திரைப்படம் மீண்டும் தணிக்கைச் செய்யப்பட்டு காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி எந்தவொரு காட்சிகளும் நீக்கப்படவில்லை என்பதை நாங்கள் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். பிரபல ராப் பாடகர் வேடனின் 'வாடா வேடா' பாடல் மட்டுமே தணிக்கைச் செய்யப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.மேலும், இப்படம் வெளியான நாளன்று இருந்தக் காட்சிகள் அனைத்தும் தற்போதும் உள்ளது எனவும், ஊடகங்கள் மற்றும் சினிமா பிரியர்கள் எந்தவொரு தவறான தகவல்களையும் பரப்ப வேண்டாமெனவும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
ராப் பாடகர் வேடன்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர்தான் ஹிரந்தாஸ் முரளி. சிறுவயதில் ஆற்றில் மீன்பிடிக்கச் செல்லும்போது மீன் அம்புகளைச் சரியாகக் குறிபார்த்து எறிவாராம். அப்போது அவருக்கு விளையாட்டாக வைக்கப்பட்டப் பெயர்தான் வேடன்.இந்தப் பெயருக்குப் பின்னணியில் சாதிய அடையாளமும் இருக்கிறது என்பது புரிந்து, அந்தப் பெயராலேயே மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அது அப்படியே மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
வேடனின் ராப் பாடல்களில், புரட்சிகரக் கருத்துகள் நிறைந்திருந்தன. அதேபோல எங்கெல்லாம் அடக்குமுறைகள் நடக்கிறதோ அது தொடர்பாக வேடன் பாடத் தொடங்கினார்.பாலஸ்தீனம் முதல் அமெரிக்காவில் தாக்கப்பட்ட கறுப்பின பெண் வரை சமூக அடக்குமுறைக்கு எதிராக உறுதியாகத் தெளிவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினார். மலையாள பிளாக்பஸ்டர் மஞ்சும்மல் பாய்ஸில் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுடன் இணைந்து 'குத்தந்திரம்' பாடலுக்கான வரிகளை எழுதிப் பாடினார். இவரது பாடல்களில் இந்து மதத்தையும், பிரதமர் மோடியையும் அடிக்கடி வேடன் அவமதிக்கிறார் என பாஜகவினர் அண்மையில் வேடன் மீது புகார் அளித்தனர். இதனிடையே வேடனுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி பெருகி வருகிறது.
View this post on Instagram