பெங்களூரு,
கன்னட திரையுலகின் முன்னணி நடிகை யாக இருப்பவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஆவார். தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் அவர் கன்னட திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் ஜாமீனில் வந்தது பற்றியும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டு அவரது ஜாமீனை ரத்து செய்தது பற்றியும் நடிகை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதாவது தர்ஷனுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த தர்ஷனின் ரசிகர்கள், நடிகை ரம்யாவுக்கு ஆபாசமாகவும், தகாதவார்த்தையில் திட்டியும் இன்ஸ்டா கிராமில் குறுஞ்செய்தி அனுப்பினர். மேலும் பாலியல் பலாத்கார மிரட்டலும் விடுத்தனர். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ரம்யா, பெங்களூரு போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் தர்ஷனின் ரசிகர்களான 12 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை பெங்களூரு 46-வது செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைதான 12 பேர் மீதும் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கோர்ட்டில் சாட்சியம் அளிக்க நடிகை ரம்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகை ரம்யாவும், குற்றம்சாட்டப்பட்ட 12 பேரும் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். இந்த வழக்கில் முதல் சாட்சி நடிகை ரம்யா என்பதால் அவர் நேற்று நீதிபதி ராஜீவ்கவுடா முன்பு வாக்குமூலம் அளித்தார். அவர் பாலியல் மிரட் டல் தொடர்பாக வாக்குமூலம் அளித்ததால் நீதிபதி, வக்கீல்கள் மட்டுமே அறையில் இருந்தனர். அந்த அறை பூட்டப்பட்டது.
பூட்டிய அறையில் நீதிபதியிடம் நடிகை ரம்யா, தனக்கு வந்த ஆபாச தகவல்கள், பாலியல் மிரட்டல்கள் வந்தது பற்றி விரிவாக வாக்குமூலம் அளித்தார். அவை அனைத்தும் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் நடிகை ரம்யா வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்த பிறகு கோர்ட்டில் இருந்து நடிகை ரம்யா காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.