சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா உடனான முதல் சந்திப்பு குறித்து மனம் திறந்த ராஷ்மிகா

விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த ‘ரணபலி’ திரைப்படம் வரும் 16ம் தேதி வெளியாகவுள்ளது.

விஜய் தேவரகொண்டாவால் படப்பிடிப்பில் தான்அழுததாக நடிகை ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிரிக் பார்ட்டி’ கன்னட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’, ‘பீஷ்மா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழில் ‘சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, இந்தியில் ‘அனிமல்’ படத்தில் நடித்தார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ‘புஷ்பா’ படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

மறைந்த பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் ‘எம்எஸ்- எ லேகசி ஆன் ஸ்கிரீன்’ படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார்.

நீண்ட நாள்களாக காதலித்து வந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த ‘ரணபலி’ திரைப்படம் வரும் 16ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

‘கீதா கோவிந்தம்’ படப்பிடிப்பு தளத்தில்

இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா இருவரும் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். அதில் பேசிய ராஷ்மிகா ‘கீதா கோவிந்தம்’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்.

அதில், “நானும் விஜய் தேவரகொண்டாவும் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, படப்பிடிப்பில் நான் சத்தமாக பாடலை ஒலிக்கவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, விஜய் தேவரகொண்டா கோபத்தில் என்னைத் திட்டிவிட்டார். சினிமாவுக்குள் நுழைந்த காலம் என்பதால் உடனே அழுகையும் வந்துவிட்டது. ஆனால் நாட்கள் கடந்தபின் அவரை பற்றி புரிந்துக் கொண்டு,நண்பர்களாகி விட்டோம்.

அவருடன் நடிக்கும் போது எனக்கு எந்தப் பயமும் ஏற்படவில்லை. அவர் எப்போதும் சக நடிகர்களுக்கு முழு சுதந்திரமும், வசதியான சூழலையும் அமைத்துக் கொடுப்பார். நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றிய படங்களின் படப்பிடிப்பில், ஒவ்வொரு காட்சியையும் எவ்வாறு சிறப்பானதாக மாற்றலாம் என்று எப்போதும் விவாதித்துக் கொண்டே இருப்போம். திரைக்கு அப்பாலும் எங்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதலும், வலுவான நட்பும் உருவாக அதுவே முக்கியக் காரணமாக அமைந்தது” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT