சினிமா செய்திகள்

வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக நடிகர் ரவி மோகன் காவல் நிலையத்தில் புகார்

நடிகர் ரவி மோகன் தனது வீட்டில் பணியாற்றிய பணிப்பெண் நகை திருட்டில் ஈடுபட்டதாக கூறி அவர்களை தனது வீட்டில் சிறைபிடித்து வைத்திருந்ததாக தகவல் வெளியானது.

நடிகர் ரவி மோகன் தனது வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வீட்டில் பணியாற்றிய பணிப்பெண் நகை திருட்டில் ஈடுபட்டதாக நடிகர் ரவி மோகன் புகாரில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் இருப்பதால் கடந்த ஓராண்டாகவே சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளார். மனைவியைப் பிரிந்தவர் பாடகி கெனிஷாவுடன் இணைந்து வாழ்ந்து வந்தார்.

நடிகர் ரவி மோகனின் சென்னை நீலாங்கரை வீட்டில் பணிபுரிந்து வந்த பணிப்பெண் நகை மற்றும் பண திருட்டில் ஈடுபட்டதாக கூறி ரவி மோகன் அவர்களை சிறைபிடித்துள்ளார். பணிபெண் வீடு திரும்பாததால் அவரது கணவர் ரவி மோகன் வீட்டிற்கு சென்று கேட்டபோது பணிப்பெண்ணை தனது கண்காணிப்பில் வைத்திருந்த ரவி மோகன் அவரை திருப்பி அனுப்ப மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பணிப்பெண்ணின் கணவர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாரளித்ததாகவும் காவல் அதிகாரிகள் ரவி மோகன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது இரண்டு பணிப்பெண்களை ரவி மோகன் சிறைபிடித்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

நகை திருட்டு குறித்து முறையாக காவல் துறையில் புகாரளிக்கும்படியும் சட்டவிரோதமாக பணிப்பெண்களை தனது வீட்டில் சிறைபிடித்து வைத்திருப்பது தவறு என்றும் காவல் துறையினர் ரவி மோகனுக்கு அறிவுறுத்தியுள்ளனர். காவல்துறையினர் அப்பெண்களை மீட்டனர்.

இந்நிலையில், தனது வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் நடிகர் ரவி மோகன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தேவையான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் உறுதியளித்துள்ளனர்.