சினிமா செய்திகள்

ரவி தேஜாவின் “இருமுடி கட்டு” படத்தின் டிரெய்லர் வெளியானது

ரவி தேஜா நடித்த ‘இருமுடி கட்டு’ படம் வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா, ரசிகர்களால் ‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படுகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாஸ் ஜாதரா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது தனது 77-வது திரைப்படமான ‘இருமுடி கட்டு’ படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறார்.

இந்தப் படத்தை ‘மஜிலி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்ஷத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஐயப்ப பக்தராக ரவி தேஜா

சமீபத்தில் வெளியான ‘இருமுடி கட்டு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த போஸ்டரில், ஐயப்ப பக்தராக தலையில் இருமுடி சுமந்தபடி வித்தியாசமான தோற்றத்தில் ரவி தேஜா காட்சியளித்திருந்தார். இந்த புதிய தோற்றம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆன்மிகம், உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் கலந்த இந்தப் படம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவி தேஜாவின் வித்தியாசமான கதாபாத்திரத்தை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘இருமுடி கட்டு’ பாடல் வெளியானது. இந்த பாடலை அனந்த் பாடியுள்ளார். பாடல் வரிகளை சிவ நிர்வாணா மற்றும் கல்யாண் சக்ரவர்த்தி இணைந்து எழுதியுள்ளனர்.

டிரெய்லர் வெளியீடு

இந்த நிலையில் , ‘இருமுடி கட்டு’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தெலுங்கில் ‘இருமுடி’ என வெளியாகிறது.