சோனாக்சி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் நடிப்பில் அஸ்வினி திவாரி இயக்கியுள்ள படம்‘சிஸ்டம்’ . இதில் ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த மே 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இப்படம் ஒரு விறுவிறுப்பான திரில்லர் படமாகும்.
இதில் சோனாக்சி சின்ஹா வசதி படைத்த மற்றும் செல்வாக்கு மிக்க அரசு வழக்கறிஞராக நடித்துள்ளார். ஜோதிகா எளிய பின்னணியில் இருந்து வந்த நீதிமன்ற சுருக்கெழுத்தாளராக நடித்துள்ளார். சமூக அந்தஸ்தில் முற்றிலும் வேறுபட்ட இந்த இரு பெண்களும், புதைக்கப்பட்ட அநீதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர எப்படி கைகோர்க்கிறார்கள்? அதிகாரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கு இடையே அவர்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. இரு வலிமையான பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இப்படம் தொடர்பான பேட்டி ஒன்றில், ‘ஜோதிகாவிடம் எப்போது மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிப்பீர்கள்’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன ஜோதிகா, “நான் சரியான கதைகள் வருவதற்காக காத்திருக்கிறேன். அழுத்தமான வேடங்கள் உள்ள படங்கள் பல நடித்திருக்கிறேன். அரசுப் பள்ளி ஆசிரியை முதல் வழக்குரைஞர் வரை பெண் மைய பாத்திரங்கள் செய்யக்கூடிய எல்லா வேடங்களிலும் நடித்துவிட்டேன். குடும்பத் தலைவியாகவும் பல விதங்களில் நடித்துவிட்டேன். நான் இப்போது புதுமையான, வித்தியாசமான ஒன்றைத் தேடுகிறேன். அதற்காக 2 வருடங்கள்கூடக் காத்திருக்க நான் தயார்.
நான் மம்முட்டி சாருடன் ஒரு மலையாளப் படத்தில் நடித்தேன். அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை என்னை மிகவும் கவர்ந்தது. அமைதியான, அதேநேரத்தில் வலுவான பாத்திரம் அது. இதுபோன்று வித்தியாசமான வேடங்களை நான் தேடுகிறேன். இல்லை என்றால் அது சலிப்பைத் தரக்கூடியதாக இருந்துவிடும். எனக்கு மட்டும் அல்ல பார்வையாளர்களுக்குமே. அவர்கள் என்னை 30 வருடங்களாகப் பார்த்து வருகிறார்கள். நான் ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப செய்வதை அவர்கள் விரும்பவில்லை. நான் எப்போதும் நல்ல மனிதராக, நல்லவற்றை மட்டுமே செய்யக்கூடியவளாக நடித்திருக்கிறேன். ஒருகட்டத்துக்கு மேல் வேறுவிதமான ரோல்களை எதிர்பார்க்கிறேன்.
மேலும், இப்போதுள்ள பார்வையாளர்களும் மேம்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பல மொழிப் படங்களையும் பார்க்கிறார்கள். நானும் இதை என் நடிப்பில் அடுத்தபடியாக, அடுத்தகட்டமாக நான் பார்க்கிறேன். மேலும், இதுபோன்ற வேடங்களைத் தேர்ந்தெடுப்பதில் சூர்யா மிகுந்த ஆதரவாக இருக்கிறார். அப்படியான வேடங்களுக்காக நான் காத்திருக்கிறேன், ஆனால் வருவதில்லை. தென்னிந்திய சினிமாக்களில் அப்படியான வேடங்களை யாரும் எழுதுவதில்லை.
எனக்கு, பெண்ணின் பல்வேறு பரிணாமங்களைப் பிரதிபலிக்கும் வேடங்களில் நடிக்க விருப்பம். ஏனென்றால், பெண்கள் நிஜ வாழ்வில் நிறைய பரிமாணங்களைக் கொண்டவர்கள்தாம். அப்படியான வேடங்கள் எனக்கு இங்கு (பாலிவுட்) வருகின்றன. எனவே இது தமிழ்ப் படமா, இந்திப் படமா என்பதல்ல அது குஜராத்தி படமாக இருந்தாலும்கூட அந்த வேடம் எனக்குப் பிடிக்க வேண்டும். எனக்கு ஒரே விஷயத்தை மீண்டும் செய்யவோ, அந்த ஆறு முகபாவங்களை மட்டுமே நடிக்க விருப்பமில்லை” என்றார்.