புதிய திரைப்படங்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில், அதிகாலை 6 மணிக்கே வெளியாகி விடுகின்றன. தமிழ்நாட்டில் அத்திரைப்படங்கள் காலை 9 மணிக்கு வெளியாவதால் தவறான விமர்சனங்களும் படத்தைக் குறித்த எதிர்மறையான கருத்துகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
புதிய திரைப்படங்களுக்கு ஒரு நாளில் அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்களை அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டிய அரசு, அதிகாலையிலேயே அவர்களை திரையரங்குகளுக்கு அழைப்பதை சாதனையாகக் கருதுவது வெட்கக்கேடு என்று சீமான் பேசியிருந்தார்.
இந்நிலையில், புதிய திரைப்படங்களின் முதல் வாரத்தில் அதிகாலை மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கியது குறித்த சீமானுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் அளித்து கடிதம் அனுப்பியுள்ளது.
புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில் அதிகாலை 6 மணி முதல் ஒரு வாரத்திற்கு காட்சிகள் திரையிட்டுக் கொள்ளவாம் என்று மிகுந்த அக்கறையுடன் தமிழ்த் திரையுலகிற்கு ஆதரவளித்து அனுமதி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் இந்தச் செயல்பாடு குறித்து தாங்கள் 2026 நவம்பர் 4ஆம் தேதியிட்ட கடிதத்தைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைந்து இக்கடிதத்தை அனுப்புகிறோம்.
மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய பிரபல நடிகர்கள் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வெளிமாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா/தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில், அதிகாலை 6 மணிக்கே வெளியாகி விடுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் அத்திரைப்படங்கள் காலை 9 மணிக்குத்தான் திரையிடத் தொடங்குகின்றன. அதற்குள் தவறான விமர்சனங்களும் படத்தைக் குறித்த எதிர்மறையான கருத்துகளும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு இங்கு திரைப்படம் பார்க்கக காத்திருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தைக் குறைக்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு பிரச்சினைகளைத் தமிழ்த் திரையுலகம் சந்தித்து வருகிறது.
உலகெங்கும் தமிழ்த் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை முதல்-அமைச்சர் அவர்களிடம் தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் மூலமாக எடுத்துச் சென்றோம். எங்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உடனடியாக அனுமதி வழங்கிய முதல்-அமைச்சர் அவர்களை ஓட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகமே பாராட்டி வருகிறது. ஆனால் இந்த அனுமதி வழங்கப்பட்டதற்கான காரணத்தை தவறாகப் பரிந்துகொண்டு இத்தகைய அனுமதி ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும் ஒரு செயலாகும் என்று குறிப்பிட்டு தமிழ்தாடு அரசைக் குறை கூறி தாங்கள் கடிதம் வெளியிட்டிருப்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.
அதிலும் தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராகவும், தற்போது பல திரைப்படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகராகவும் திகழும் தாங்கள் எதற்காக இந்த அனுமதியை தாங்கள் கோரிப் பெற்றோம் என்பதை அறியாமல் இத்தகைய அறிக்கையை வெளியிட்டிருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. எங்களது நியாயமான கோரிக்கையைத்தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்றுக்கொண்டு இந்த அனுமதியை வழங்கியுள்ளார் என்பதை மீண்டும் ஒருமுறை தங்களது கவனத்திறகுக் கொண்டு வருகிறோம்.தமிழ்த் திரையுலகின் ஒரு முக்கிய அங்கமாக திகழும் தமிழ்த் திரையங்கின் நலன் கருதி வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியை வரவேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.