கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், 1974-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்ரீனிவாச கல்யாணம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் 'ஜெயிலர்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது 'ஜெயிலர் 2' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையில், இயக்குநர் பவன் வடேயார் இயக்கத்தில் உருவாகி வரும் 'பெயில்' திரைப்படத்தில் சிவராஜ்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை கேவின் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சஞ்சனா ஆனந்த், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, ஜெயராம், சாய் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதலில், 'பெயில்' திரைப்படம் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், 'பெயில்' திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, படம் அக்டோபர் 2-ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
புதிய ரிலீஸ் தேதியுடன் வெளியான அறிவிப்பு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ள நிலையில், சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.