சென்னை,
நடிகர் விஜய் சேதுபதியும், சாய் பல்லவியும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இஞ்சி வெல்லம்'. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளார். 'தக் லைப்' திரைப்படத்தைத் தொடர்ந்து, லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரனும் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.
புதிய காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியின் 19-வது படைப்பாக உருவாகி வரும் இப்படத்திற்கு, அவிக் முகோபாத்யாய் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். மேலும், ஷர்மிஷ்டா ராய் கலை இயக்கத்தையும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும், பிருந்தா மாஸ்டர் நடன இயக்கத்தையும் கவனித்துக் கொள்கின்றனர். மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் மற்றுமொரு காதல் திரைப்படம் என்பதால் 'இஞ்சி வெல்லம்' படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, 'இஞ்சி வெல்லம்' திரைப்படம் 2027-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை புதிய மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
மேலும், சமீபத்தில் வெளியான 'மீசையை முறுக்கு 2' மற்றும் '418' ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கவனம் ஈர்த்த நடிகை சைத்ரா ஜே. ஆச்சார், 'இஞ்சி வெல்லம்' திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.