சென்னை,
'லவ் பைட்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது கதாநாயகனாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படித்தான்', 'சக்கப்போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சந்தானம் தற்போது அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்கும் புதிய படத்தில் நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரிக்கிறார். இதில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ஆனந்த்ராஜ், கல்கி ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜாம்பி கதையை மையமாகக் கொண்டு திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்திற்கு 'லவ் பைட்' என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில், சில தினங்களுக்கு முன்பு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், 'லவ் பைட்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வித்தியாசமான ஜாம்பி கதைக்களத்தில் நகைச்சுவையுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் குறித்த அறிவிப்புகளை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.