சென்னை,
அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்முட்டி கூட்டணியில் உருவாகியுள்ள ‘பாதயாத்திரா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி, பல்வேறு மொழிப் படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். தமிழில் ‘மவுனம் சம்மதம்’, ‘அழகன்’, ‘தளபதி’, ‘கிளிப்பேச்சு கேட்கவா’, ‘அரசியல்’, ‘மறுமலர்ச்சி’, ‘ஆனந்தம்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிப்புடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் இவர், தற்போது இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாதயாத்திரா’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன், ‘அனந்தரம்’, ‘மதிலுகள்’, ‘விதேயன்’ உள்ளிட்ட குறிப்பிடத்தக்க திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படங்களில் மம்முட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்முட்டி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தை மம்முட்டியே தயாரித்துள்ளார். இந்திரன்ஸ், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பாதயாத்திரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் காக்கநாடு பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அண்மையில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாகப் படக்குழு அறிவித்தது. இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. மலைக்கிராமத்தில் மருத்துவராகப் பணியாற்றும் மம்முட்டிக்கும், அங்குள்ள கிராம மக்களுக்கும் இடையேயான உறவை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருப்பது டிரெய்லர் மூலம் தெரியவருகிறது.
அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்முட்டி கூட்டணியில் உருவாகியுள்ள ‘பாதயாத்திரா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால், ‘பாதயாத்திரா’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.