சினிமா செய்திகள்

“அன்பே டயானா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாரி இளவழகன் இயக்​கி, நடிக்​கும் ‘அன்பே டயா​னா’ படத்தில் ரம்யா ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்ற பாரி இளவழகன், தற்போது புதிய திரைப்படமான ‘அன்பே டயானா’வை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தை ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது திரைப்படமாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது.

ரோஜாவின் மறுபிரவேசம்... பலர் இணைந்துள்ள நட்சத்திர பட்டாளம்

இந்தப் படத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா மீண்டும் திரையுலகில் நடிப்பிற்கு திரும்பியிருப்பது படத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

இவர்களுடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம், சென்னை பெரம்பூரை மையமாகக் கொண்டு குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சியை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார்.

வெளியீட்டு தேதி அறிவிப்பு

‘அன்பே டயானா’ திரைப்படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT