தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், 'பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். தொடர்ந்து பல பிரமாண்ட படங்களில் நடித்து வரும் அவர், தற்போது 'சீதா ராமம்' படத்தின் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகி வரும் 'பெளசி' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'பெளசி' படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் தயாரித்து வருகின்றனர். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்தில், இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், மூத்த நடிகர்கள் மிதுன் சக்ரவர்த்தி, ஜெயபிரதா, சைத்ரா ஜே ஆச்சார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் 'பெளசி' திரைப்படம் அதிரடி ஆக்சன் மற்றும் காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகி வருகிறது. பிரபாஸின் மாறுபட்ட தோற்றமும், ஹனு ராகவபுடியின் உணர்வுப்பூர்வமான திரைக்கதையும் இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 'பெளசி' திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை நடிகர் பிரபாஸ் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பான் இந்தியா படமாக உருவாகும் 'பெளசி' திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காள மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. பிரபாஸின் அடுத்த பெரிய வெற்றிப் படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.