புதுடெல்லி,
பாலிவுட் நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் ‘அதூரே ஹம் அதூரே தும்’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்த இம்ரான் கான், கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘கட்டி பட்டி’ படத்துக்குப் பிறகு கதாநாயகனாக நடிப்பதைத் தவிர்த்து வந்தார். தற்போது சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘அதூரே ஹம் அதூரே தும்’ என்ற காதல் நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் பூமி பெட்னேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டேனிஷ் அஸ்லம் இப்படத்தை இயக்கியுள்ளார்.இந்தத் திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது.
அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள இம்ரான் கான், வெளிநாட்டு இந்தியர் அட்டையையும் வைத்துள்ளார். கடந்த அக்டோபர் 10-ம் தேதி மும்பையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அவர் பங்கேற்றார். இதையடுத்து, போலீசார் அவரைத் தடுத்து வைத்த பின்னர் அதே நாளில் விடுவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர் கிரித் சோமையா புகார் அளித்தார். இதன் தொடர்ச்சியாக, வெளிநாட்டினர் பதிவு அலுவலகம் , இம்ரான் கான் அக்டோபர் 28-ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என நோட்டீஸ் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், இம்ரான் கானின் சட்டக் குழுவினர் நோட்டீஸை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, படத்தின் விளம்பரப் பணிகளை தீபாவளிக்குப் பிறகு தொடங்கத் தயாரிப்புக் குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், இம்ரான் கானின் தற்போதைய சட்டச் சிக்கல் காரணமாக விளம்பரப் பணிகளைத் தொடங்குவதில் தயக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைப்பது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுவது குறித்து நெட்பிளிக்ஸ் தரப்பிலோ, படக்குழுவினரோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.