சினிமா செய்திகள்

‘இதயம் முரளி’ படத்திலிருந்து ‘கட்டழகி’ என்ற பாடல் வெளியீடு

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா, கயாடு லோஹர் நடிக்கும் ‘இதயம் முரளி’ படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ளது.

சென்னை,

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில், தற்போது இப்படத்திலிருந்து ‘கட்டழகி’ என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து, அவரே பாடியுள்ள நிலையில், பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் ‘பாணா காத்தாடி’, ‘பரதேசி’, ‘சண்டிவீரன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய அதர்வா, சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது ‘இதயம் முரளி’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் இயக்குவதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

நட்சத்திர பட்டாளத்துடன் உருவான ‘இதயம் முரளி’

டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், நிஹாரிகா மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில், பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இசையமைப்பாளராக மட்டுமல்ல... நடிகராகவும் தமன்

‘பாய்ஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு முழுமையாக இசையில் கவனம் செலுத்தி வந்த தமன், ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிகராக திரைக்கு வருகிறார். இப்படத்தில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வருகிற ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.