சினிமா செய்திகள்

"அனுமதி இன்றி கேமராவை அகற்றினார்" – நடிகர் சரவணன் மீது மனைவி புகார்

வீட்டில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை அகற்றியதாக நடிகர் சரவணன் மீது அவரது முதல் மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் சரவணன். பின்னர் திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால், 'பருத்திவீரன்' படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கிய அவர், 'ஜெயிலர்', 'அரண்மனை' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இவர், சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி சூரியஸ்ரீ. இவர், நேற்று மவுலிவாக்கம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கண்காணிப்பு கேமரா அகற்றம்

எனக்கும், சரவணனுக்கும் திருமணமாகி குழந்தைகள் இல்லை. இதனால் சரவணன், 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஒரே குடியிருப்பில் தனித்தனியாக வசித்து வருகிறோம். எங்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

எனக்கு அச்சுறுத்தல்கள் இருந்து வந்ததால் வீட்டின் முன்பு கண்காணிப்பு கேமரா பொருத்தி இருந்தேன். ஆனால் எனது அனுமதி இன்றி சரவணன், ஆட்களை வைத்து அந்த கேமராவை அகற்றிவிட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி இருந்தார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து மவுலிவாக்கம் போலீசார், நடிகர் சரவணனிடம் விசாரித்தபோது, அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்பகுதியில் உள்ள செட்டிற்கு கேமரா வயர் இடையூறாக இருந்ததால் அதை அகற்றியதாகவும், தற்போது மீண்டும் பொருத்தி கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக மவுலிவாக்கம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.