பெங்களூரு,
ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு எதிராக அவரது நண்பரே அரசு சாட்சியாக மாறினார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவை நிபந்தனைகளுடன் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைதானார்கள். அவர்களில் 14-வது குற்றவாளியாக நடிகர் தர்ஷனின் நண்பரான பிரதோஷ் சேர்க்கப்பட்டார். இவர்கள் அனைவரும் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தன்னை அரசு தரப்பு சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று பிரதோஷ் பெங்களூரு 59-வது சிட்டி சிவில் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி சுஜாதா முன்னிலையில் நடந்தது. அதையடுத்து விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.
அதன்படி நேற்று இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுஜாதா முன்னிலையில் நடந்தது. அப்போது பிரதோஷ் அரசு தரப்பு சாட்சியாக மாற அனுமதி அளித்து நீதிபதி சுஜாதா உத்தரவிட்டார். அவரது மனுவையும் அங்கீகரித்தார். மேலும் நீதிபதி சுஜாதா சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார்.
தனக்கு தெரிந்த உண்மைகள் அனைத்தையும் கோர்ட்டில் கூற வேண்டும், பொய்யான தகவலை தெரிவித்தால் கோர்ட்டின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும், விசாரணை முடியும் வரை சிறையில் தான் இருக்க வேண்டும், ஒருவேளை பொய்யான தகவலை தெரிவித்தால் மீண்டும் அவர் குற்றவாளியாக கருதப்படுவார் என்பது உள்பட பல நிபந்தனைகளை நீதிபதி சுஜாதா விதித்துள்ளார்.
அரசு தரப்பு சாட்சியாக ஆனதன் மூலம் பிரதோஷ் கூறும் சாட்சியம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற 16 பேரும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.