சென்னை,
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் அர்ஜுன் தாஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த வில்லன் நடிகர் விருதையும் பல்வேறு திரைப்பட விருதுகளையும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும், அநீதி, ரசவாதி மற்றும் போர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது அர்ஜுன் தாஸ் கைவசம் கான் சிட்டி மற்றும் ஒன்ஸ்மோர் ஆகிய படங்கள் உள்ளன. அதில் ‘கான் சிட்டி’ திரைப்படம் வருகிற ஜூன் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், அர்ஜுன் தாஸ் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொள்ள உள்ளதாகவும், ஒரு நடிகையை காதலித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவல்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அர்ஜுன் தாஸின் மக்கள் தொடர்பு மேலாளர் யுவராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “அர்ஜுன் தாஸ் திருமணம் குறித்து பரவி வரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன் உண்மைத்தன்மையை சரிபார்க்குமாறு ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.