சினிமா செய்திகள்

"என் நெஞ்சில் குடியிருக்கும்..." - மேடையில் விஜய் பாணியில் பேசிய நடிகர் ஜெய்!

‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தில் விஜய் அவர்களின் ரசிகனாக ஜெய் நடித்துள்ளார்.

சென்னை,

பிரபல இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபு விஜய் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘சட்டென்று மாறுது வானிலை’. இதில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நகைச்சுவை, காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 15ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று சென்னையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியின் மேடையில், "என் நெஞ்சில் குடியிருக்கும்..." என முதல்வர் விஜய் பாணியில் நடிகர் ஜெய் பேசினார். அதாவது, "என் நெஞ்சில் குடியிருக்கும்... என தொடங்கிய ஜெய், இதை மேடையில் பேச வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை என தெரிவித்தார். மேலும், இந்த படத்தில் நான் விஜய் அவர்களின் ரசிகனாக நடித்துள்ளேன். இந்த படத்தில் அவருடைய சாயல் என்னிடத்தில் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படத்தின் இயக்குனர் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் தராமல், கதைக்கு என்ன தேவையோ அதை செய்துள்ளார். அதனால் படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள், நிச்சயம் இந்த படம் உங்கள் அனைவரும் பிடிக்கும் என நம்புகிறேன்.

நம் படத்தின் டைட்டிலை போல தான் (சட்டென்று மாறுது வானிலை), இங்கேயும் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த மாற்றம் இதற்கு அப்புறம் எப்போதும் மாறாது என நம்பிக்கையா இருக்கேன். உங்களுக்கு எல்லாம் பிடித்த வானிலையாக தான் இனி தமிழ்நாடு இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.