சினிமா செய்திகள்

குடும்பத்தின் தனியுரிமை, மனநிலையை மதியுங்கள்.. நடிகர் அஜித் குடும்பத்தினர் வேண்டுகோள்

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி இன்று காலை காலமானார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது தாயார் மோகினி (84). இவர் இன்று சென்னையில் வயது மூப்பு காரணமாக காலமானார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித் வீட்டில் அவரது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. தற்போது துபாயில் இருக்கும் அஜித் சென்னை வருகிறார்.

இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் தாயார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித்தின் தந்தை கடந்த 2023-ம் ஆண்டு தனது 85 ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மோகினி மணியின் இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும் என்று அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர். இதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்களின் அன்புத் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் இன்று தனது 85வது வயதில் அமைதியாக காலமானார் என்பதை மிகுந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் எங்கள் குடும்பத்தின் இதயமாக விளங்கியவர். எல்லையற்ற அன்பு, அமைதியான மனவலிமை, ஞானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் உருவமாக இருந்தார். அவரது இருப்பும் அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கை மதிப்புகளும் எங்கள் வாழ்வை வடிவமைத்தவை. அவை என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

அவரது பிரிவு ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவருடன் பகிர்ந்து கொண்ட எண்ணற்ற இனிய நினைவுகள், அவர் எங்கள்மீது பொழிந்த அளவற்ற பாசம் மற்றும் அவரது அன்பாலும் கருணையாலும் அவர் தொட்டுச் சென்ற பலரின் வாழ்வுகள் எங்களுக்கு ஆறுதலாக உள்ளன.இந்தக் கடினமான நேரத்தில் தங்களது பிரார்த்தனைகள், இரங்கல் செய்திகன் மற்றும் ஆறுதல் வார்த்தைகள் மூலம் எங்களுடன் நிற்கும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அன்பும் ஆதரவும் எங்கள் குடும்பத்திற்கு பெரும் ஆறுதலாக இருக்கிறது.

இந்த பேரிழப்பை ஏற்றுக்கொள்ள முயற்சித்து வரும் இந்நேரத்தில், எங்கள் குடும்பத்தின் தனியுரிமையையும் மனநிலையையும் மதித்து புரிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு உடனடியாக பதிலளிக்க இயலாத நிலை இருக்கலாம். இறுதிச் சடங்குகள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் நடைபெறும். எங்கள் தாயாரின் ஆன்மா சாந்தியடைய தங்களது பிரார்த்தனைகளில் நினைவுகூருமாறு கேட்டுக் கொள்கிறோம். அவரது அன்பும் அரவணைப்பும் எங்களுடன் என்றும் நிலைத்திருக்கும்.

- அனுப் குமார், அஜித் குமார், அனில் குமார்.

இரங்கல் செய்திகளை psmanifamily@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.