சினிமா செய்திகள்

'பெண்களை மதியுங்கள்' - திரையுலகினரிடம் நடிகை கஜோல் வேண்டுகோள்

நடிகை கஜோல், திரைப்படத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

இந்திய திரையுலகில் 1992-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகையாக திகழ்கிறார் கஜோல். தமிழில் 1997-ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு வெளியான வேலையில்லாத பட்டதாரி 2 திரைப்படத்தில் தனுஷ் உடன் நடித்திருந்தார். பாலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வந்த கஜோல், 51 வயதிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நடிகைகளுக்கு சமமான மரியாதை தேவை

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய கஜோல், திரைப்படத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், “படப்பிடிப்பு தளங்களில் நடிகர்களுக்கு கிடைக்கும் பல விஷயங்கள் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை. நான் சினிமாவுக்கு வந்த காலத்தில் நடிகைகளுக்கு பெரிய அளவில் மதிப்பு தர மாட்டார்கள். தற்போது அந்த நிலை பெருமளவில் மாறிவிட்டது என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

பாதுகாப்பு வசதிகள் மிக முக்கியம்

மேலும் பேசிய கஜோல், “படப்பிடிப்பு தளங்களில் பெண்களை மதிக்க வேண்டும். நடிகைகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். அது மிகவும் முக்கியமான விஷயம்” என்று வலியுறுத்தினார். திரையுலகில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதை குறித்து கஜோல் தெரிவித்த இந்த கருத்துகள் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.