சினிமா செய்திகள்

வென்று வா தலைவா.. நாங்க இருக்கோம்: விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் கடிதம்

நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

சென்னை,

தவெக தலைவரும் நடிகருமான விஜய்யை நடிகர் சத்யராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் சத்யராஜ், விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவரது மகனும் நடிகருமான சிபிராஜ், விஜய்க்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தனது எக்ஸ் தளத்தில் சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

ஒரு குட்டி லெட்டர் என்ற கேப்ஷனுடன் சிபிராஜ் தனது பதிவில் கூறியிருப்பதாவது: "அன்புள்ள விஜய் அண்ணா, உங்களை முதன்முதலில் நான் சந்தித்தது 1993-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி. பொள்ளாச்சியில் உள்ள சக்தி ஹோட்டல் மொட்டை மாடியில், அப்பாவின் பிறந்தநாள் விழாவிற்காக எஸ்.ஏ. சந்திரசேகர் சார் மற்றும் கேப்டன் விஜயகாந்த் அங்கிள் ஆகியோருடன் நீங்கள் வந்திருந்தீர்கள். அப்போது அமைதியாக இருந்த இந்த இளைஞர், பின்னாளில் என்னையும் சேர்த்து கோடிக்கணக்கான இதயங்களை வென்று, ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பார் என்று எனக்குத் தெரியாது.

உங்களின் 'குட்டி ஸ்டோரி'கள் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலை எங்களுக்கு அளித்தன. கடந்த 3 தசாப்தங்களாக எங்களை மகிழ்வித்து, ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி அண்ணா! திரையில் நீங்கள் கொடுத்த அந்த அற்புதமான தருணங்களை நாங்கள் எப்போதும் நெஞ்சில் சுமப்போம். வென்று வா தலைவா! நாங்க இருக்கோம்" என்று பதிவிட்டுள்ளார்.