புதுடெல்லி,
'மூடுபனி' என்ற தமிழ்ப்படத்தில் இடம்பெற்ற 'என் இனிய பொன்நிலாவே' என்ற பாடல், 'அகத்தியா' என்ற புதிய தமிழ்ப்படத்தில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. அதை எதிர்த்து சரிகம இண்டியா லிமிடெட் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த பாடலின் காப்பிரைட் உரிமை தங்களிடம் இருப்பதாக தெரிவித்தது. ஆனால், அகத்தியா படத்தயாரிப்பு நிறுவனம், தாங்கள் பாடலின் இசையமைப்பாளரான இளையராஜாவிடம் உரிமம் பெற்றிருப்பதாக தெரிவித்தது. இளையராஜாவும் 'காப்பிரைட்' சட்டப்படி தனக்கு உரிமம் வழங்க அதிகாரம் இருப்பதாக கூறினார்.
ஆனால் அவரது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி மினி புஷ்கர்ணா, பாடலின் ஒலிப்பதிவின் ஒரு அங்கமான பாடல் வரிகளுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என்று அவரது மனுவை தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் இளையராஜா மேல்முறையீடு செய்தார்.
அந்த மனு, நீதிபதிகள் ஹரிசங்கர், ஓம்பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜாவின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதுகுறித்து நீதிபதி கூறும்போது, "காப்பிரைட் சட்டத்தின் 2(பி) பிரிவின்படி, இசைப்பணி என்பதில் பாடல் வரியோ அல்லது ஒலிப்பதிவோ வராது. அதில், ஒரு பாடலின் இசைக்கோர்வை மட்டுமே அடங்கும். எனவே, என் இனிய பொன்நிலாவே பாடலின் இசையமைப்பாளரான இளையராஜா, அந்த பாடலின் ஒலிப்பதிவுக்கோ, பாடல் வரிகளுக்கோ உரிமை கோர முடியாது. 'மூடுபனி' படத்தின் காப்பிரைட் உரிமை, அதன் தயாரிப்பாளரிடம் உள்ளது. அவர் முறையாக 'சரிகம' நிறுவனத்துக்கு உரிமை அளித்துள்ளார்."இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கில், நீதியின் தீர்ப்பை எதிர்த்து இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.ஹரி சங்கர் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா அமர்வு, "முந்தைய தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை, மெட்டுக்கு மட்டும்தான் உரிமை.. வரிகளுக்கு இல்லை.. இப்பாடலின் மெட்டிற்கு மட்டுமே இளையராஜா உரிமை கோர முடியும் என்றும், அதன் வரிகள் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றின் மீது "சரிகம" நிறுவனத்திற்கே முழு காப்புரிமை உள்ளது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.