‘களவாணி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஓவியா. மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே, காஞ்சனா-3 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். அனிதா உதீப் இயக்கத்தில் 90 எம்.எல் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் முத்த காட்சி, படுக்கை அறை காட்சி, மது அருந்துதல், கஞ்சா அடித்தல், ஆபாசமாக இரட்டை அர்த்த வசனங்கள் பேசுதல் போன்றவை இடம்பெற்று இருந்தன. ஓவியாவே இதுபோன்ற அநாகரிகமான காட்சிகளில் படத்தில் நடித்து இருப்பதாக கண்டனம் எழுந்தன.இப்போது ஓவியா மார்க்கெட் இழந்த நடிகையாக இருக்கிறார்.
கரூர் கூட்ட நெரிசல் பலிக்காக விஜய்யைக் கைது செய்ய வேண்டுமென கூறி விஜய் ரசிகர்களின் தாக்குதல்களுக்கும் ஆளானார்.
இந்த நிலையில், நடிகை ஓவியா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “ரூட் மாபியாவை அம்பலப்படுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் மேலாளரான ஜெகதீஷ் பழனிச்சாமி நடத்திவரும் தயாரிப்பு மற்றும் மேலாண்மை நிறுவனமான ரூட் பல நடிகர்களின் சினிமா ஒப்பந்தங்கள் மற்றும் புரமோஷன்களை நிர்வகிக்கும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது. சேஷம் மைக்-இல் பாத்திமா, ரிவால்வர் ரீட்டா, மகாராஜா திரைப்படங்கள் மூலம் நேரடியாக தயாரிப்பிலும் இந்நிறுவனம் இறங்கியது. அண்மை காலமாக ரூட் தமிழ் சினிமாவின் மாபியா போல் செயல்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. முக்கியமாக, திட்டமிட்டே சில நடிகர்களின் தொழில் வாழ்க்கையைக் கெடுப்பதாகவும் சிலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறியுள்ளனர். குறிப்பாக, நடிகை பிரியங்கா மோகன் இந்நிறுவனத்தின் பெயரைச் சொல்லாமல் தன்னை திட்டமிட்டுத் தாக்கியதாகக் கூறினார்.
இந்த நிலையில், நடிகை ஓவியாவும் குரல் கொடுத்துள்ளது கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக, முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்பும் ஓவியா தன் கருத்தை தைரியமாகக் கூறியுள்ளார் என ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.
சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக விஜய்யின் பிராண்ட் மதிப்பை உயர்த்தியதில் தொடங்கி, தமிழக வெற்றிக் கழகத்தின் டிஜிட்டல் ராஜ்ஜியம் வரை ஜெகதீஷ் மற்றும் அவரது ‘ரூட்’ நிறுவனம் ஆற்றிய பங்கு தற்போது மற்ற அரசியல் கட்சிகளின் பார்வையை ஒட்டுமொத்தமாக திருப்பியிருக்கிறது. தமிழக அரசியல் வரலாற்றில் எம்ஜிஆருக்கு நிகரான ஒரு பிம்பமாக விஜய்யை இன்று கொண்டு வந்து நிறுத்தி இருப்பதற்கு பின்னால் பல காரணிகள் உள்ளன. அதில் ஜெகதீஷும், அவருடைய சோஷியல் மீடியா குழுவும் மிக முக்கியமான பங்காற்றியதை விவரம் அறிந்த யாரும் மறுக்க முடியாது. ஜெகதீஷின் ரூட் நிறுவனம் வெறும் சினிமா மேலாண்மை நிறுவனமாக மட்டுமின்றி, ஒரு மிகப் பெரிய தரவு பகுப்பாய்வு மையமாகவும் செயல்பட்டது.