டெல்லி,
பாலிவுட் நடிகை நோரா பதேகிக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ரூ.200 கோடி மோசடி மற்றும் பணம் பறித்தல் வழக்கில், சாட்சியாக ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரபல மோசடி மன்னனாகக் கூறப்படும் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி ரோகிணி சிறையில் இருந்தபோது, அரசு உயர் அதிகாரி போல ஆள்மாறாட்டம் செய்து பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது, முன்னாள் ரான்பாக்சி நிறுவன உரிமையாளர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் இருந்து, 2020-2021 காலகட்டத்தில் சுமார் ரூ.200 கோடி பணம் பெற்றதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. சிறையில் இருந்த தனது கணவரை விடுதலை செய்ய உதவுவதாகக் கூறி சுகேஷ் பணம் பெற்றதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நடிகை நோரா பதேகியிடமும் ஏற்கனவே டெல்லி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சுகேஷ் சந்திரசேகருடனான தொடர்பு மற்றும் அவரது மனைவி லீனா மரியா பவுலோஸ் உடனான தொடர்பு குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அப்போது, சுகேஷ் சந்திரசேகருடன் தனது தொடர்பு அவரது மனைவி மூலமாகவே ஏற்பட்டதாக நோரா பதேகி விசாரணையின்போது தெரிவித்திருந்தார். மேலும், 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோரா பதேகியை வழக்கில் சாட்சியாகப் பட்டியலிட்டுள்ளது. இதையடுத்து, வரும் நவம்பர் 2-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்டவராக அல்லாமல், சாட்சியாகவே ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.