சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா தனது சகோரியான நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மீது ரூ.46 கோடி அளவில் செக் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 80-களில் பல வெற்றிப் படங்களில் நடித்து குடும்ப ரசிகர்களை கவர்ந்தவர்கள் நடிகை அம்பிகா மற்றும் ராதா சகோதரிகள். இவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.
ரூ. 46 கோடி அளவில் காசோலை மோசடி நடைபெற்றதாக தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் குஞ்சன் நாயர் மீது மீது, நடிகை ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ராதா அளித்த புகாரில், “ஆர்.ஆர் கார்டன் என்ற பெயரில் பிசினஸ் செய்து வருகிறேன். நான் சென்னைக்கு வரும்போதெல்லாம், சென்னை வளசரவாக்கத்திலுள்ள எனது வீட்டின் தரைத்தளப் பகுதியில் தங்குவது வழக்கம். எனது சகோதரி அம்பிகா நாயரும் அதே தரைத்தளப் பகுதியில் தங்கியிருந்து, தரைத்தளத்தில் உள்ள எனது பகுதிக்கு வந்து சென்று கொண்டிருந்தார். உறவுமுறையைக் கருத்தில் கொண்டு, எனது பகுதிக்கு வந்து செல்ல அவரை நான் அனுமதித்திருந்தேன்.
தொழிலாளர்களின் சம்பளம், மின்சாரக் கட்டணம், சொத்துவரி, குடிநீர் மற்றும் கழிவுநீர்க் கட்டணம், தோட்டம் பராமரிப்புப் பொருட்களுக்கான கட்டணம் உள்ளிட்டவற்றைச் செலுத்துவதற்காக, கையொப்பமிட்ட 5 அல்லது 6 காலிக் காசோலைகளை எனது அறையில் வைப்பது வழக்கம்.
‘ஆர்.ஆர் கார்டன்’ என்ற புதிய வணிகப் பெயரில் எனக்கு புதிய செக் புக் வழங்கப்பட்டது. தற்போது அந்தப் புதிய காசோலை புத்தகத்தையே நான் பயன்படுத்தி வருகிறேன். இத்தகைய சூழ்நிலையில், கடந்த 17ம் தேதி அன்று எனக்கு அதிர்ச்சியும் வியப்பும் அளிக்கும் விதமாக, எனது வங்கிக் கிளையிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. அதில் காசோலைகள் எனது சகோதரி அம்பிகா நாயரின் பெயரில் பணமாக்குவதற்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நான் எனது வங்கிக் கிளையைத் தொடர்புகொண்டு, அந்தக் காசோலைகள் திருடப்பட்டுச் சட்டவிரோத லாபத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அவற்றின் பணப் பரிவர்த்தனையை நிறுத்துமாறு கோரினேன்.
எனது சகோதரி அம்பிகா நாயரும் எனது சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயரும் சட்டவிரோதமாகப் பயனடையும் நோக்கில் என்னை ஏமாற்றவும் மோசடி செய்யவும் பொதுவான எண்ணத்துடன் கூட்டுச்சதி செய்து, நான் இல்லாத நேரத்தில் எனது அறைக்குள் அத்துமீறி நுழைந்து, எனக்குத் தெரியாமல் கையொப்பமிட்ட பிளாங்க் காசோலைகளைத் திருடி, அந்தக் காசோலைகளில் பெயர், தொகை, தேதி ஆகியவற்றைத் தங்களின் விருப்பப்படி நிரப்பி, எனது வங்கியில் பணமாக்குவதற்காகத் தாக்கல் செய்துள்ளனர். இது முற்றிலும் சட்டவிரோதமானதாகும். ” நடிகை ராதா புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கு குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகவும் என்று கூறப்படுகிறது.