சினிமா செய்திகள்

ரூசோ பிரதர்ஸின் “அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே” படத்தின் தமிழ் டீசர் வெளியானது

‘அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே’ திரைப்படம், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் தமிழ்ப் பதிப்பின் டீசர் வெளியானது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்பட வரிசையில் அடுத்ததாக வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ரூசோ பிரதர்ஸ் மீண்டும் இணைவு

‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தையும் இயக்கியுள்ளனர். இந்தப் படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஷூரி, கிறிஸ் எவன்ஸ், ஜேம்ஸ் மார்ஸ்டன், வனேசா கிர்பி, ரெபேக்கா ரோமிஜின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘டாக்டர் டூம்’

மார்வெல் காமிக்ஸ் கதைகளின் சூப்பர் வில்லனான ‘டாக்டர் டூம்’ கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் மார்வெல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் இப்படத்தில் ‘டாக்டர் டூம்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டிசம்பர் 18-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்

மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான விளம்பர பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் டிசம்பர் 17-ல் ரிலீஸ்

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் தமிழ் பதிப்பின் டீசரை படக்குழு வெளியிட்டது. உலகளவில் வருகிற டிசம்பர் 18 ஆம் தேதியில் படம் வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் ஒருநாள் முன்கூட்டியே டிசம்பர் 17-ல் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் அயர்ன்மேன் கதாபாத்திரத்துக்கு தமிழ்ப் பதிப்பில் ரவிசங்கர் தேவநாராயணன் குரல் கொடுத்திருந்தார். ‘எண்ட்கேம்’ படத்தில் மட்டும் அயர்ன்மேன் பாத்திரத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி குரல் கொடுத்தார். இருப்பினும், அயர்ன்மேன் பாத்திரத்துக்கு விஜய்சேதுபதி குரல் கொடுத்தது ரசிகர்களிடையே விமர்சனங்களைப் பெற்றது.

SCROLL FOR NEXT