சென்னை இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. சாகித்ய அகாடமி 1954ல் துவக்கப்பட்டது. 1955ல் வழங்கிய முதல் விருது, நெல்லையை சேர்ந்த ஆர்.பி.சேதுப்பிள்ளைக்கு, தமிழ் இன்பம் படைப்பிற்காக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை எழுத 2 ஆண்டு காலம் ஆனது என்றும், 50க்கும் மேற்பட்ட கதைகளை வாசித்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன் எனவும் ச.தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறார்.
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட வேண்டிய விருது இறுதி செய்யப்பட்டு, கடந்த டிசம்பர் 18-ல் அறிவிக்கப்பட இருந்த நிலையில், மத்திய அரசு அதனை தடுத்து நிறுத்தியதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர்.
சாகித்ய அகாடமி போன்ற சுதந்திரமான கலாசார அமைப்பிலும் மத்திய அரசு தலையிடுவதாக விமர்சிக்கப்படுகிறது. கலாசார அமைச்சகத்துடன் ஆலோசிக்காமல் விருதுகளை அறிவிக்கக்கூடாது என்ற புதிய நிபந்தனை, படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் என எழுத்தாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.