பிரபல பாலிவுட் நடிகை தனிஷா முகர்ஜி, படத்தில் சீதையாக நடித்த சாய் பல்லவி குறித்து தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 5-ம் தேதி ‘ராமாயணா’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுமார் ரூ.2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணன் வேடத்தில் யாஷும், அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் நடித்துள்ளனர். மேலும், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். பிரமாண்டமான காட்சியமைப்புகள், நட்சத்திரங்களின் பங்களிப்பு என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெளியான 22 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் ரூ.1,777 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2' திரைப்படத்தின் உலகளாவிய வசூலான ரூ.1,742 கோடியை முறியடித்துள்ளது. அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் ‘ராமாயணா’ திரைப்படம் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்கர் போட்டிக்கு இப்படம் தேர்வாகியுள்ளது.
ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்ற ‘ராமாயணா’ படத்தின் இயக்குநர் நிதீஷ் திவாரி, சாய் பல்லவி, ரன்பீர் கபூர் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சமீபத்தில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
படம் வெற்றி பெற்றாலும் படம் குறித்த விமர்சனங்கள் ஓய்ந்த பாடில்லை. குறிப்பாக சீதையின் கதாபாத்திரம் குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதிகாசத்தில் இருப்பது போல சீதையின் கதாபாத்திரம் இல்லை என்றும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை தனிஷா முகர்ஜி, படத்தில் சீதையாக நடித்த சாய் பல்லவி குறித்து தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் “சாய் பல்லவி சிறந்த நடிகை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சீதை கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாகத் தெரியவில்லை. அவரது தோற்றம் கதாபாத்திரத்துடன் தன்னை ஒன்றிணைய விடவில்லை. ரன்பீர் கபூர் நன்றாக நடித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தனிஷா முகர்ஜி, பாலிவுட் நடிகை கஜோலின் தங்கை ஆவார். இவர் தமிழில் 'உன்னாலே உன்னாலே' படத்தில் நடித்திருக்கிறார்.