மும்பை,
1980 காலகட்டத்தில் தொலைக்காட்சியில் வெளியான 'ராமாயணம்' தொடரில் சீதையாக நடித்து இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகை தீபிகா சிக்லியாவும் தற்போது, சாய் பல்லவியின் சீதை கதாபாத்திரம் குறித்து விமர்சித்துள்ளார்.
இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவான 'ராமாயணா' திரைப்படம் கடந்த 5ந் தேதி வெளியானது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுமார் ரூ.2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணன் வேடத்தில் யாஷும், அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் நடித்துள்ளனர். மேலும், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
பிரமாண்டமான காட்சியமைப்புகள், நட்சத்திரங்களின் பங்களிப்பு என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படம் உலகளவில் இது வரை ரூ.900 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், இப்படத்தில் சீதையின் கதாபாத்திரம் குறித்து தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 1980 காலகட்டத்தில் தொலைக்காட்சியில் வெளியான 'ராமாயணம்' தொடரில் சீதையாக நடித்து இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகை தீபிகா சிக்லியாவும் தற்போது, சாய் பல்லவியின் சீதை கதாபாத்திரம் குறித்து விமர்சித்துள்ளார்.
அவர் கூறும்போது, 'ராமாயணம்' தொடரில் சீதையாக நான் நடித்த காரணத்தால் தான் மக்கள் என்னை அந்த கதாபாத்திரத்துடன் நெருக்கமாக இணைத்து பார்த்தார்கள். சாய் பல்லவி மிகச்சிறந்த நடிகை. அதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை. ஆனால் சீதையின் தோற்றத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக சுருள் முடி விஷயத்தில் எனக்கு உடன்பாடில்லை. துளசிதாசரின் ராமாயணத்திலும் அப்படி நான் படித்ததும் கிடையாது, கேள்விப்பட்டதும் இல்லை. பாரம்பரிய ராமாயண விளக்கங்களுடன் அது எப்படி பொருந்துகிறது? என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது, என்று குறிப்பிட்டுள்ளார்.