தன் வாழ்க்கை பற்றிய பயோபிக் படம் ஒரு போதும் எடுக்கப்படாது. என் வாழ்க்கை என்னோடு சேர்த்து புதைக்கப்பட்டு விடும் என்று சல்மான்கான் கூறியுள்ளார்.
சல்மான் கான் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர். பல ஆண்டுகளாக சினிமாவில் இருப்பதால் பாலிவுட் திரைத்துறையில் தனித்துவமான நடிகராகவும் எப்போதும் சர்ச்சைகள் சூழவும் வலம் வருகிறார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான சிக்கந்தர் தோல்விப்படமானது. தற்போது, இயக்குநர் வம்சி படிபள்ளி இயக்கத்தில் நடிகை நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.
நடிகர் சல்மான்கான் 60 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யவில்லை. 2000 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருந்தும் திருமண விஷயத்தில் அவர் ஆர்வம் காட்டவில்லை. அவரது வாழ்க்கையில் பல காதல் வந்து சென்றன. ஆனால் எதுவுமே நிலைத்து நிற்கவில்லை. நடிகை சங்கீதா பிஜ்லானியுடன் திருமணம் வரை சென்று கடைசி நேரத்தில் அத்திருமணம் நின்று போனது.
சல்மான் கானுக்கு மாபியா கும்பலான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து கொலை அச்சுறுத்தல்கள் வருவதாகக் கூறி, ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் நடத்தி வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சல்மான்கான் தனது உடல் நலம், பயோபிக் படம், ஷாருக்கானுடன் இருந்த மோதல் குறித்து மனம் திறந்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அதில் “என் வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்ட பல காயங்கள் மற்றும் அது போன்ற காரணங்களால் என் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. பலர் என்னை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள். இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் தந்தையர்களின் உடல் தகுதியை, தன்னுடைய உடல் தகுதியுடன் ஒப்பிட்டு, அவரே இப்படி இருக்கும்போது, உங்களால் ஏன் இருக்க முடியாது?" என்று கேட்கின்றனர். எனவே என் உடல் அமைப்பைப் பேணிக்காக்க வேண்டியது அவசியம். இருப்பினும், திரையுலகில் என்னை விடவும் சிறந்த உடல் தகுதியுடன் இருப்பவர்கள் பலர் உள்ளனர்.
சிலரது தவறான வழிகாட்டுதலால் எனக்கும் ஷாருக்கானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பே அது சரியாகி நாங்கள் சுமூகமான உறவில் இருக்கிறோம். அது பற்றி மற்றவர்கள் கவலைப்படத் தேவையில்லை. என் வாழ்க்கை பற்றிய பயோபிக் படம் ஒரு போதும் எடுக்கப்படாது. அதற்கு நான் அனுமதிக்கப்போவதில்லை. என் வாழ்க்கை என்னோடு சேர்த்து புதைக்கப்பட்டு விடும்” என்றார்.