சினிமா செய்திகள்

2 நாட்களில் ரூ.28 கோடி வசூலித்த சமந்தாவின் “எங்கள் தங்கம்”

‘எங்கள் தங்கம்’ படத்தில் அதிரடி கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதுடன் தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ நேற்று முன்தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு கதை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியானது.

அதிரடி கதாபாத்திரத்தில் மிரட்டும் சமந்தா

இந்தப் படத்தில் இதுவரை இல்லாத வகையில் அதிரடி கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்தப் படம் சமந்தாவின் வெற்றிகரமான மீள்வருகை படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

படத்தின் வசூல் விவரம்

இந்த நிலையில், ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் 2 நாட்களில் ரூ.28 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.13 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.