சினிமா செய்திகள்

சமந்தா நடித்துள்ள 'மா இன்டி பங்காரம்' படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்

'மா இன்டி பங்காரம்' திரைப்படம் வருகிற ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகை சமந்தா ரூத் பிரபு கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘சுபம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவரது தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படமாகும். இதனைத் தொடர்ந்து, ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தை சமந்தா தயாரித்து, கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம், 1980-களின் பின்னணியில் குடும்பம் மற்றும் அதிரடியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

அதிரடி பெண்ணாக சமந்தா

இந்தப் படத்தில் சமந்தா அமைதியான மருமகளாகவும், அதே நேரத்தில் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் அதிரடி பெண்ணாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் முன்னோட்டக் காட்சி மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

அதனைத் தொடர்ந்து வெளியான திரைப்படத்தின் முன்னோட்டப் படம், அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலானது.

‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்

இந்த நிலையில், ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலுடன் படத்தை திரையரங்குகளில் கண்டு ரசிக்கலாம்.

வருகிற ஜூன் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம், சமந்தாவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.