சினிமா செய்திகள்

சனாதனம் என்பது மதம் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை - நடிகர் அர்ஜுன்

சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி நடித்த ‘பிளாஸ்ட்’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

சென்னை,

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன், தற்போது அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுபாஷ் கே ராஜ், நடிகர் பிரதீப் ரங்கநாதன் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கேஜிஎப் படத்தின் இசையமைப்பாளரான ரவி பசூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘பிளாஸ்ட்’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. நேற்று (மே 28) வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

நடிகர் அர்ஜூன் விஜய் முதலமைச்சரானது குறித்து “என்னுடைய நண்பர் முதல்வராக வந்திருக்கிறார். அவர் இப்போது தான் பதவியேற்றிருக்கிறார். 100 சதவீதம் அவர் நல்லது செய்வார் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ‘பிளாஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் அர்ஜூன் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். “சனாதனம் என்பது ஒரு வாழ்க்கை முறை. வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது சனாதனத்தில் இருக்கிறது. திருடாதீர்கள், இன்னொரு பொருளுக்கு ஆசைப்படாதீர்கள் , வயதான நம் பெற்றோர்களை பார்த்துக்கொள்ள சொல்லி சனாதனம் தர்மம் சொல்கிறது. சனாதனம் இருக்கக் கூடாது என்றால் நம் பெற்றோர்களை வீட்டில் இருந்து துரத்திவிட வேண்டும். அது சாத்தியமா. சனாதனம் என்பது ஒரு மதம் இல்லை அது ஒரு வாழ்க்கை முறை. சனாதன தர்மத்தை நான் அப்படிதான் புரிந்துகொண்டிருக்கிறேன். எல்லாரும் அதை புரிந்துகொண்டால் நன்றாக இருக்கும்” என அர்ஜூன் கூறினார் .

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளால் தொடர்ச்சியாக சனாதன எதிர்ப்பு என்பது பேசப்பட்டு வரும் நிலையில் அர்ஜூனின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அர்ஜூனின் இந்த கருத்து தொடர்ச்சியாக சனாதன எதிர்ப்பை பேசி வரும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலளிக்கவே பேசியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.