கமல் ‘சண்டியர்’ பட தலைப்பை மாற்றும் வரை படப்பிடிப்பை நடத்த விடாமல் போராட்டம் நடத்துவோம் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கமல்ஹாசன் தயாரித்து நாயகனாக நடிக்கும் மற்றொரு புதிய படத்தை, இயக்குநர் சு.அருண் குமார் இயக்குகிறார். இவர் சித்தா, வீரதீர சூரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ‘சண்டியர்’ என பெயரிடப்பட்டுள்ளது.
கமல் நடிக்கும் ‘சண்டியர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 7ம் தேதி தொடங்கியதாக படக்குழு அறிவித்திருந்தது.
‘சண்டியர்’ படத்தின் தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
அப்போது பேசிய அவர், “கடந்த 2003-ஆம் ஆண்டு இதே ‘சண்டியர்’ என்ற பெயர் அறிவிக்கப்பட்டபோது, தென் தமிழகத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் புகார் அளித்ததையடுத்து படத்தின் பெயர் மாற்றப்பட்டது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரைப் பயன்படுத்துவது சமூகத்தில் சாதி ரீதியான மோதல்களை உருவாக்கும் வகையில் உள்ளது. நடிகராக இருந்த கமல்ஹாசன் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் இருப்பதால் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மேலும், சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுவதாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஒருவர், சாதி மோதல்களைத் தூண்டும் வகையிலான பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது. ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் அனுமதித்தது தவறு. ‘சண்டியர்’ திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும். இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி புகார் அளிக்க உள்ளோம். இந்தப் பெயரில் திரைப்படத்தை எடுக்க அனுமதிக்க மாட்டோம்; படப்பிடிப்பு நடத்தவும், திரைப்படம் வெளியிடவும் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம்” என தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் அமைச்சர் ராஜ்மோகனை நேரில் சந்தித்து ‘சண்டியர்’ பட தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி புகார் மனு அளித்தார்.
‘சண்டியர்’ என்ற தலைப்பு கடந்த 2003-ம் ஆண்டு கமல்ஹாசன் படத்திற்கு வைக்கப்பட்டு அப்போது தென் மாவட்டங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது எழுந்த எதிர்ப்பால் அப்படம் ‘விருமாண்டி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதே தலைப்பை மீண்டும் வைப்பது தேவையற்ற குழப்பத்தையும் வன்முறையையும் தூண்டும் என்பதால், இப்படத்தின் தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது மாற்ற வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது
“கமல்ஹாசனுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கிறோம். தலைப்பை மாற்றிய பிறகுதான் படப்பிடிப்பு நடத்த வேண்டும். தலைப்பை மாற்றாமல் படப்பிடிப்பு நடத்தினால், வெளிப்புறமாக இருந்தாலும் சரி, ஸ்டுடியோவில் இருந்தாலும் சரி, தலைப்பை மாற்றும் வரை படப்பிடிப்பை நடத்த விடாமல் போராட்டம் நடத்துவோம்” என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
‘சண்டியர்’ என்ற பெயர் தென் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குறிப்பிடுகிறார். ஆதிக்க சாதிய மனநிலையையும், சாதியப் பெருமையைக் கொண்டாடும் வகையிலும் இப்பெயர் அமையும் என்றும், இதன் காரணமாக சாதிய மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.