மும்பை,
பஞ்சாபி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சர்குன் மேத்தா, தனது புதிய திரைப்படமான ’கேரி ஆன் ஜட்டா 4’ பட ரிலீஸை முன்னிட்டு பல சுவாரசியமான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சர்குன் மேத்தா பேசுகையில்,
"ஏமாற்றங்கள் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. பல நேரங்களில் நாம் விரும்பும் விஷயங்கள் நமக்குக் கிடைக்காது. சில சமயங்களில் நம்மால் செய்ய முடியும் என்று நினைத்த காரியங்களைக்கூட செய்ய முடியாமல் போகலாம். இத்தகைய ஏமாற்றங்கள் தினசரி கூட ஏற்படலாம். ஆனால் நம்முடைய அணுகுமுறை எப்போதும் 'விழுந்தாலும் எழுந்து ஓடுவது' என்பதாக இருக்க வேண்டும்" என்றார்.
வரும் 26-ம் தேதி வெளியாக உள்ள “கேரி ஆன் ஜட்டா 4” திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டதாக உருவாகியுள்ளது. இந்தத் தொடரின் முதல் பாகம் , 2012-ம் ஆண்டு ஸ்மீப் காங் இயக்கத்தில், கிப்பி கிரேவால் மற்றும் மஹி கில் நடிப்பில் வெளியானது.
அதனைத் தொடர்ந்து 2018 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் வெளியான இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது நான்காவது பாகம் வெளியாக உள்ளது.
37 வயதான சர்குன் மேத்தா, கல்லூரி காலத்திலேயே நடிப்பில் ஆர்வம் காட்டி பின்னர் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் புகழ்பெற்றார். 2009-ம் ஆண்டு 12/24 கரோல் பாக் தொடரின் மூலம் அறிமுகமான அவர், பின்னர் புல்வா மற்றும் பாலிகா வது போன்ற பிரபல தொடர்களில் நடித்தார்.
2015-ம் ஆண்டு ஆங்ரேஜ் திரைப்படத்தின் மூலம் பஞ்சாபி திரையுலகில் அறிமுகமான சர்குன் மேத்தா, தொடர்ந்து லவ் பஞ்சாப், கிஸ்மத், கிஸ்மத் 2 மற்றும் சௌங்கன் சாங்க்னே உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
2022-ம் ஆண்டு அக்சய் குமார் நடித்த ’கட்புட்லி’ திரைப்படத்தின் மூலம் சர்குன் மேத்தா இந்தி திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படம், தமிழில் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ’ராட்சசன்’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.