நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் மலையாள திரையுலகினருக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘சீன்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 6-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. மலையாளத்தில் 'ஆவேசம்', 'ரோமன்சம்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
நஸ்ரியா, நஸ்லன், லால், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படத்தில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ‘விக்டர்’ எனும் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
‘சீன்’ திரைப்படம் வெளியான 8 நாட்களில் ரூ.211 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் ‘சீன்’ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் மலையாள திரையுலகினருக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புள்ள டொவினோ, எங்களின் விக்டராக இருந்ததற்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. நீங்கள் மிகுந்த அன்போடும், தாராள மனதோடும் இந்தப் படத்தில் இணைந்துகொண்டது எனக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நெகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், ‘சீன்’ படத்தில் எங்களுடன் இணைந்த மலையாள திரையுலகைச் சேர்ந்த துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் என் நன்றிகள். இது மலையாள சினிமாவுக்கு எங்களின் சிறிய காதல் கடிதம்” என கூறியுள்ளார்.