தனது வாழ்க்கையில் தான் இந்த நிலையில் இருப்பதற்கும், சரியான வழியில் செல்வதற்கும் மனைவியின் வழிகாட்டுதலே முக்கியக் காரணம் என்று ஜோதிகா குறித்து சூர்யா பேசியுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘ஆவேஷம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், நடிகர் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது.
சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து வெளியாகும் ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
‘சீன்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவில் மேடையில் பேசிய நடிகர் சூர்யா தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகா குறித்துப் பேசிய நெகிழ்ச்சியான வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று குறிப்பிட்ட அவர், தனது வாழ்க்கையில் இன்று தான் இந்த நிலையில் இருப்பதற்கும், சரியான வழியில் செல்வதற்கும் தன் மனைவியின் வழிகாட்டுதலே முக்கியக் காரணம் என்று தெரிவித்தார். தன் வாழ்க்கையில் பல தவறுகளைத் செய்திருந்தாலும், எல்லாவற்றிலும் உறுதுணையாக நின்று தன்னை வழிநடத்தியவர் ஜோதிகா என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.
ஜோதிகா ஒரு சிறந்த தாய், சிறந்த தோழி, மிகச்சிறந்த வாழ்க்கைத்துணை மட்டுமல்லாமல், மிகவும் வலிமையான ஒரு பெண் என்றும் சூர்யா புகழாரம் சூட்டினார். சூர்யா பேசிக் கொண்டிருக்கும் போதே, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஜோதிகா மகிழ்ச்சியுடன் அவரை நோக்கி முத்தங்களைப் பறக்க விட்டார். இந்த அழகான தருணம் அரங்கத்தில் இருந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும், இந்த மேடையை அழகாக்கியது தன் மீது அன்பு செலுத்தும் ரசிகர்களின் பேரன்புதான் என்று சூர்யா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தங்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ படத்தின் வருகைக்காக, தனது ‘ஓம்’ பட வெளியீட்டை தள்ளிவைப்பதாக அறிவித்த நடிகர் தனுசுக்கு நடிகர் சூர்யா இந்த மேடையில் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். ஜித்து மாதவனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த குடும்பத் திரைப்படமான ‘சீன்’ ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.