ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் அடுத்த பட துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அவர் பேசிய போது திரைத்துறை சார்ந்து பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
‘ஜனநாயகன்’ படம் முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறதே என்றதும் “‘ஜனநாயகன்’ படம் மட்டுமல்ல, எந்த ஒரு படமும் தணிக்கை சான்றிதழ் பெற்று முறைப்படிதான் வெளியாக வேண்டும். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அவர் மிக எளிமையான உதவி இயக்குநருக்கு பிறந்தார். வளர்ந்த பின்னரும் அவரது பிறந்தநாளுக்கு பார்ட்டி அளிப்பதெல்லாம் இல்லை. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்க சொல்லுவார். வளர்ந்த குழந்தைகளுக்கு ரொட்டி பால், படிப்பவர்களுக்கு படிப்பகம், படிப்பில் வென்றால் கல்வி விருதுகள் என செயல்படுகிறார். இவை எல்லாம் பெரிய சமூக கொண்டாட்டம். அவரது திரைப்படம் வெளியாவது என்பது இது போன்ற சமூக கொண்டாட்டத்தில் ஈடுபவர்களுக்கான பண்டிகை. அந்தப் பண்டிகை விரைவில் வரும் என நான் நம்புகிறேன்” என்றார்.
படத்தில் தளபதி விஜய் என வருமா? இல்லை முதல்-அமைச்சர் விஜய் என வருமா? என்ற கேள்விக்கு “நேற்று அவர் நடிகர் விஜய், இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், நாளை அவர் கையில் இல்லை, காலம் என்ன தீர்ப்பு தர இருக்கிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எங்களை பொறுத்தவரை அவர் என்றும் தளபதி” என்றார்.
டிக்கெட் விலையை உயர்த்த கோரி திரையரங்க உரிமையாளர்கள் கேட்டிருக்கிறார்களே? என்றதும் “மற்ற மாநிலங்களில் டிக்கெட் விலையை ஏற்றி கொண்டு வந்துவிட்டார்கள். அதற்கு ஏற்ப அதன் அனுபவத்தையும் உயர்த்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு பொறுத்தவரை அது மக்களுக்கு சுமையாக கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். மக்கள் - திரையரங்கு என இரண்டு தரப்பையும் திருப்திபடுத்துமாறு டிக்கெட் விலையை நிர்ணயிப்போம். திரைத்துறை என்பது பெரிய தலைவர்களை உருவாக்கிய தாய்மாடி. எங்கள் முதல்-அமைச்சர் கூட அங்கே இருந்துதானே வந்தார். அதனால் அந்த துறையில் எல்லா கோரிக்கையும் பரிசீலித்து, நிர்வாக மற்றும் நிதி ரீதியாக என்ன தேவை உள்ளதோ அதை முதலமைச்சரின் அறிவித்தலில் பெயரில் சரி செய்வோம்” என்றார்.
திரைத்துறையில் உள்ள நபரே உங்களை விமர்சித்துள்ளாரே என்றதும் “நீங்கள் சொல்வது புரிகிறது. நண்பர் விஷாலை எனக்கு பிடிக்கும். அவருடைய படங்களை நானும் பார்த்திருக்கிறேன். அவருக்கு என்னை தெரியாமல் இருக்கலாம். எனக்கு அவரை தெரியும். அவருடைய நம்பிக்கையும் பெறும்படி நல்லா வேலை செய்து தளபதி பெயரை காப்பாற்றுவேன்” என்றார் அமைச்சர் ராஜ்மோகன்.