சினிமா செய்திகள்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் தமிழ் படம் 'ஸ்க்ரோல்'

கண்ணன் இயக்கத்தில் அரவிந்த் சுந்தர், காவ்யா அனில் நடித்துள்ள திரைப்படம் 'ஸ்க்ரோல்'.

'கே16 ஸ்டுடியோஸ்' தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஸ்க்ரோல்' திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), ‘Indian Panaroma’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் ICFT-UNESCO Gandhi Medal விருதிற்கும் இந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 7 பிற நாட்டு திரைப்படங்களோடு தேர்வான ஒரே தமிழ் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

'பாஸ்வேர்டு' என்ற தமிழ் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ‘Screen movie’ வகையைச் சார்ந்த இந்த திரைப்படம், கதை முழுக்க நாயகனின் செல்போன் திரை வழியே சொல்லப்படுகின்ற வித்தியாசமான முயற்சியாக உருவாகியுள்ளது. 'Smartphone addiction' என்பதை மையப்படுத்தி இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தின் பிடியில் சிக்கியிருக்கிறதா மனித இனம்? அல்லது மனிதனின் கோர மனதின் கருவியாகத் தொழில்நுட்பம் மாறியிருக்கிறதா? இந்த இரு கேள்விகளுக்கும் இடையே, விறுவிறுப்பான ஒரு திரைக்கதையாக விரிகிறது இந்தப் படம்!

அரவிந்த் சுந்தர் மற்றும் காவ்யா அனில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் மேகா ராஜன் , ‘கொட்டுக்காளி’ முருகன் கோவிந்தசாமி , 'விக்கல்ஸ்' சிபி , பொற்கொடி, சுரேந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜோகன் மற்றும் தினகர் ஆகியோர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளனர். திரைக்கதை, ஒளிப்பதிவு மற்றும் வி.எப்.எக்ஸ். பணிகளை படத்தின் இயக்குனர் கண்ணனே மேற்கொண்டுள்ளார்.

இன்று முதல் (நவம்பர் 20) 28-ந்தேதி வரை கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் World Premiere ஆக முதன் முதலில் இந்த படம் திரையிடப்படுகிறது. அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT