சினிமா செய்திகள்

"ஸ்டுடியோவில் ரகசிய கேமரா.." - பாலியல் அத்துமீறல்களை உடைத்து பேசிய பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன்

பாலியல் அத்துமீறல்களில் இருந்து தப்பிக்கவே தான் ரிஷிகேஷில் குடியேறியதாக அவர் கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

பின்னணி பாடகியாக தனது குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்வாகதா கிருஷ்ணன். பாடகியாக மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு வெளியான ‘காயல்’ திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் தனது வாழ்க்கையில் சந்தித்த அதிர்ச்சிகரமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், சினிமாவில் பாட வேண்டும் என்ற ஆசையுடன் வாய்ப்புகளை தேடியபோது நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு கோரஸ் பாடியதாகவும், சிலர் வாய்ப்புக்காக தவறான கோரிக்கைகள் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். “அவற்றை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று பெரிய நிலைக்கு சென்றிருப்பேன். ஆனால், எனது திறமையில் நம்பிக்கை வைத்து முயற்சி செய்தேன்” என கூறினார்.

மேலும், சென்னையில் உள்ள ஒரு முன்னணி இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் வேலை செய்தபோது தான் கடுமையான பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளானதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த இசையமைப்பாளர் ஸ்டுடியோவில் ரகசிய கேமராக்களை வைத்து பெண்களை வீடியோ எடுத்ததாகவும், தனது செயல்களுக்கு ஆன்மீகப் போர்வை போர்த்தி நியாயப்படுத்தியதாகவும் அவர் குற்றச்சாட்டினார். இத்தகைய அத்துமீறல்களில் இருந்து தப்பிக்கவே தான் ரிஷிகேஷில் குடியேறியதாக அவர் கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி கடந்த 6 ஆண்டுகளாக ரிஷிகேஷில் துணி வியாபாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.