சினிமா செய்திகள்

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் அரசியல் அத்துமீறல்கள் - சீனு ராமசாமி குற்றச்சாட்டு

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலை நேர்மையாக நடத்த, தற்போதைய தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும் என்று சீனு ராமசாமி கூறியுள்ளார்.

தென்​னிந்​தி​யத் திரைப்பட எழுத்​தாளர்​கள் சங்​க தேர்தல் அதிகாரி உமா சங்கர் பாபுவின் செயல்பாடுகள் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தென்​னிந்​தி​யத் திரைப்பட எழுத்​தாளர்​கள் சங்​கத்​துக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடத்​தப்​படு​வது வழக்​கம். பழைய நிர்​வாகி​களின் பதவி காலம் முடிவடைந்​த​தால், கடந்த 12ம் தேதி தேர்​தல் நடை​பெற இருந்​தது. இச்​சங்​கத்​தின் தலைவராக இருந்த கே.​பாக்​ய​ராஜ் மறைவை அடுத்து தேர்​தல் தள்ளி வைக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் இச்​சங்​கத்​தின் தேர்​தல், வரும் 19-ம் தேதி சென்னையில் நடை​பெறுகிறது. தலை​வர் பதவிக்கு வி.சி.குகநாதன் தலை​மை​யில் ‘திரைக்​கதை மன்​னன் கே.பாக்யராஜ்’ என்ற அணி​யும் சேரன் தலை​மை​யில் ‘நம்ம கே.பாக்​ய​ராஜ்’ என்ற அணி​யும் போட்​டி​யிடு​கின்​றன. இரு அணிகளும் கே.​பாக்​ய​ராஜ் பெயரிலேயே போட்​டி​யிடு​கின்​றன.

பொதுச்​செய​லா​ளர் பதவிக்கு மனோஜ் குமார், பட்​டுக்​கோட்டை பிர​பாகர், பொருளாளர் பதவிக்கு லியாகத் அலி​கான், ஆர்​.சுந்​தர் ராஜன், 2 பேர் கொண்ட துணைத் தலை​வர் பதவிக்​கு, யார் கண்ணன், சமுத்​திரக் ​க​னி, சினேகன், ஏ.வெங்​கடேஷ் உள்ளிட்டோர் போட்​டி​யிடு​கின்​றனர். 4 பேர் கொண்ட இணைச் செய​லா​ளர் பதவிக்கு 8 பேரும் 12 பேர் கொண்ட செயற்​குழு உறுப்பினர் பதவிக்கு 24 பேரும் போட்​டி​யிடு​கின்​றனர்.

இந்த நிலையில் இந்த தேர்தலின் அதிகாரி உமா சங்கர் பாபுவின் செயல்பாடுகள் நம்பகத்தன்மை இல்லாமல் இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் ஒரு ஜனநாயகத் திருவிழாவாக இருக்க வேண்டும். ஆனால், தேர்தல் அதிகாரி உமா சங்கர் பாபுவின் செயல்பாடுகள், தேர்தலின் நம்பகத்தன்மையையும், உறுப்பினர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையையும் கடுமையான கேள்விக்குறியாக்கியுள்ளன.

என் சந்தா நிலுவையில் இருந்தபோது, வேட்பாளர் கே.பி .பி. நவீன் அவர்கள் என் சார்பாக அந்தத் தொகையைச் செலுத்தினார். என் 30 ஆண்டுகால நண்பர் என் திரைப்படங்களின் நடித்தவர். அசோசியேட் ஆக வேலை செய்தவர். அதற்காக சொன்னார் சரி நீங்கள் கட்டி விடுங்கள் நான் வந்து விடுகிறேன் என்றேன்.அதற்கான தொகையை நான் அவரிடம் உடனடியாக வழங்கிவிட்டேன். இது எங்களின் தனிப்பட்ட புரிதல் மற்றும் உரிமை.

ஆனால், இந்தச் சந்தாவை செல்லாது என்று கூறி, என் அனுமதி இன்றி அந்தத் தொகையைத் தன்னிச்சையாக 'நலநிதி'க்கு மாற்றிவிடுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது எவ்வகையிலும் நியாயமற்றது. எந்த விதியின் கீழ், ஒரு உறுப்பினர் செலுத்தும் சந்தாப் பணத்தை, அந்த உறுப்பினரின் அனுமதியின்றி தேர்தல் அதிகாரி இப்படித் தன்னிச்சையாகத் திசைதிருப்ப முடியும்? இது வாக்களிக்கும் உரிமையைத் திட்டமிட்டுப் பறிக்கும் ஒரு செயல்.

​இந்தத் தேர்தல் நடைமுறைகளில் தேவையற்ற அரசியல் அத்துமீறல்கள் இருப்பதாகப் பல உறுப்பினர்கள் கருதுகின்றனர். எழுத்தாளர் சங்கம் என்பது தனிப்பட்ட நபர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் இடமல்ல, அது கலைஞர்களின் ஜனநாயக அமைப்பு. ​எனவே, தேர்தலைச் சுமூகமாகவும், நேர்மையாகவும் நடத்த, தற்போதைய தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும். சங்கங்களின் பதிவுத்துறை (Registrar of Societies) இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். மூத்தவர்கள் பாக்கியராஜ் போன்றவர்கள் வழி நடத்திய எழுத்தாளர் சங்கத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய தருணம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.