சென்னை,
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சேயோன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் சிறப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.
‘சேயோன்’ தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘டபுள் மீனிங் புரொடக்சன்’ நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு வெளியான ’மாயோன்’ திரைப்படத்தை தயாரித்த தாங்கள், அதன் இரண்டாம் பாகமாக ‘சேயோன்’ என்ற பெயரில் படம் எடுக்கத் திட்டமிட்டிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரே பெயரை பயன்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும் என தெரிவித்து, அந்தப் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘சேயோன்’ படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் சிவகுமார் முருகேசன் விளக்கமளித்துள்ளார். ‘தாய் கிழவி’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தினை இயக்கவுள்ளார் சிவகுமார் முருகேசன். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
சிவகுமார் முருகேசன் ”நான் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்ட அனைவருடனும் ‘தாய் கிழவி’ படத்தைப் பார்த்தேன். சிவகார்த்திகேயன் சாரும், ராதிகா மேடமும் எனக்காகவே முதல் நாளில் இங்கு வந்து படம் பார்த்தார்கள்.விருமாண்டி மற்றும் முருகர் என இரண்டு தெய்வங்களையும் கும்பிடுபவர்களை பற்றிய படம் தான் ‘சேயோன்’. அப்படம் யாருக்கும் எதிராகவோ, சாதமாகவோ இருக்காது. அனைத்து தெய்வங்களுக்கும் மரியாதை கொடுக்கிற படமாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் சிவகுமார் முருகேசன்.