‘கிங்’ திரைப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க விநியோக உரிமத்தை பார்ஸ் பிலிம்ஸ் ரூ.175 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃப்ளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.
இப்படத்தின் புதிய போஸ்டரில், தீப்பற்றி எரியும் சிதைந்த சரக்கு விமானத்தின் முன்பகுதியில் ஷாருக்கான் கையில் துப்பாக்கியுடன் கம்பீரமாக நிற்கிறார். வாயில் ரோஜா மலரை வைத்திருக்கும் அவரது தோற்றம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே வெளியான ‘கிங்’ படத்தின் அறிமுக வீடியோவில், அதிரடி சண்டைக் காட்சிகளுடன் ஷாருக்கானின் தீவிரமான தோற்றம் இடம்பெற்றிருந்தது. தற்போது வெளியாகியுள்ள போஸ்டர், அவரது கதாபாத்திரத்தில் அதிரடியும் காதலும் கலந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீண்டும் இணைந்துள்ள இப்படம், வரும் டிசம்பர் 24-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் வெளிநாட்டு திரையரங்க விநியோக உரிமத்தை பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த உரிமத்தை குறைந்தபட்ச உத்தரவாத அடிப்படையில் வாங்கியுள்ளது. ‘கிங்’ திரைப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க விநியோக உரிமம் ரூ.175 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு ஷாருக்கான் படங்களின் வெளிநாட்டு விநியோகத்தை ‘யஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் கவனித்து வந்த நிலையில், இந்தப் படத்திற்கு பார்ஸ் பிலிம்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.