சினிமா செய்திகள்

திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும்‌ புதிய படத்தின் அறிவிப்பு

நடிகர் ஷண்முக பாண்டியனின் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கவுள்ளதாக கேப்டன் சினி கிரியேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.

மறைந்த நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக ‘சகாப்தம்’ வெளியானது. பின்னர் ‘மதுரை வீரன்’ என்ற படத்தில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான ‘படை தலைவன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் இவர் நடித்த ‘கொம்புசீவி’ திரைப்படமும் பெரியளவில் கவனம் பெறவில்லை. இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பார் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கவுள்ளதாக கேப்டன் சினி கிரியேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தை எல். கே. சுதீஷ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் திரு, ‘சத்யம்’ பட இயக்குனர் ஏ.ராஜசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர், 2010ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் திரு இயக்குனராக அறிமுகமானார். படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் திரையரங்க வசூல் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 2013ம் ஆண்டு மீண்டும் விஷாலுடன் சேர்ந்து ‘சமர்’, 2014ம் ஆண்டு ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கினர். தொடர்ந்து 2018ம் ஆண்டு ‘திரு.சந்திரமவுலி’, 2019ம் ஆண்டு ‘சாணக்யா’ ஆகிய படங்களையும் இயக்கினார்.