சென்னை,
நடிகர் இனிகோ பிரபாகர் கதாநாயகனாக நடித்துள்ள 'மின்னும் ஓர் இரவு' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி. ராபர்ட் ராஜ் தயாரித்துள்ள இப்படத்தை சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் இனிகோ பிரபாகருக்கு ஜோடியாக அஞ்சு கிருஷ்ணா அஷோக் நடித்துள்ளார். மேலும், சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார்.
ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் குழுவினர் இரவு நேரப் பொழுதுபோக்கிற்காக காட்டுப் பகுதிக்குச் செல்கின்றனர். அங்கு எதிர்பாராத அதிர்ச்சிகரமான சம்பவங்களில் சிக்கிக்கொள்கின்றனர். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பான கிரைம் திரில்லராக உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் தற்போது டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. மர்மம், திகில் மற்றும் பரபரப்பான காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
'மின்னும் ஓர் இரவு' திரைப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.