தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை தொடர்புபடுத்தி கேட்கப்பட கேள்வி ஒன்றிற்கு, தான் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், மலையாள நடிகர் தயான் சீனிவாசன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தனது படங்களை தமிழகத்தில் திரையிட விடமாட்டோம் என சிலர் மிரட்டல் விடுத்ததாகவும், இதற்கெல்லாம் தான் பயப்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தயான் சீனிவாசன். இவர் சமீபத்தில் தனது 'விசிட்டர்' திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, நடிகை நவ்யா நாயரை குறிப்பிட்டு ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.அதாவது, தான் கேரள முதல்-அமைச்சராக பதவியேற்கும்போது, நவ்யா நாயர் சேலை அணிந்து முன்வரிசையில் அமர்ந்திருக்க வேண்டும் என்று நகைச்சுவையாக கூறியிருந்தார். இது கடும் விமர்சனங்களை சந்தித்தது.
இந்த நிலையில், தனது படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தயான் சீனிவாசன் இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ளார்.அப்போது அவர் கூறியதாவது:- விஜய் குறித்து நான் பேசிய கருத்துக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த பலர் எனது சமூக வலைதளப் பதிவுகளில் கருத்துகளை தெரிவித்தனர். எனது படத்தை தமிழகத்தில் வெளியிட்டால் ஓடவிட மாட்டோம் என்றும், எனது படங்கள் தோல்வியடையச் செய்வோம் என்றும் சிலர் மிரட்டல் விடுத்தனர். அதே நேரத்தில் சிலர் எனக்கு ஆதரவாகவும் கருத்துகளை பதிவிட்டனர்.
இதற்கெல்லாம் நான் பயப்பட வேண்டுமா? எனது தந்தை சீனிவாசன் திரைப்படங்கள் மூலம் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டவர். ஒருமுறை அவர் பேசிய கருத்துக்காக சுமார் 300 பேர் எங்கள் வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது அவர்களை நான்தான் சமாதானப்படுத்தினேன். அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு, தேநீர் வாங்கிக் கொடுத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தேன். எனது தந்தை அந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தார். ஆனால், நான் நிலைமையை கையாண்டேன்.ஒரு திரைப்படம் நன்றாக இருந்தால் நிச்சயம் ஓடும். அதில் நான் நடித்திருக்கிறேன் என்பதற்காக மட்டும் ஒரு படம் தோல்வியடையாது. நல்ல கதை மற்றும் உள்ளடக்கம் இருந்தால் யார் நடித்திருந்தாலும் அந்த படம் வெற்றிபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.