சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.
பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது. தவெகவின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன. தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்தது.
பாக்யலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், அரசியலுக்கு வருவதற்கு ஊழல் செய்திருக்கணுமா? ரௌடியாக இருக்கணுமா? சாராயம் காச்சியிருக்கணுமா? தவறு செய்திருக்கணுமா? அதுதானா தகுதியா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், பிரபல சின்னத்திரை நடிகர் சதீஷ் (பாக்கியலட்சுமி சீரியல் கோபி) வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அரசியலுக்கான தகுதி குறித்து பேசிய சதீஷ், “அரசியலுக்கு வருவதற்கு ஊழல் செய்திருக்க வேண்டுமா? ரவுடியாக இருக்க வேண்டுமா? அல்லது தவறு செய்து இருக்க வேண்டுமா? என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். ஜாதி, மதம் கடந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருப்பதே ஒரு தலைவருக்கான உண்மையான தகுதி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் “இதுவரை நான் இரட்டை இலை சின்னத்திற்கே வாக்களித்து வந்தேன். அது கட்சிக்காக அல்ல, பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் மீது இருந்த மரியாதைக்காக மட்டுமே. தற்போது தனியாக நின்று மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஒரு இளைஞனுக்கு (விஜய்) ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர் சரியாகச் செயல்படாவிட்டால் மக்கள் பிறகு பார்த்துக் கொள்ளட்டும். பெரிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக வரும் தகவல்கள் வேதனையளிப்பதாகக் கூறிய அவர், மக்கள் அளித்த தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். வீடியோவின் இறுதியில், ஜோசப் விஜய்... ஐ லவ் யூ... நீங்கள் நல்லா வருவீங்க... ஆல் தி பெஸ்ட்” என்று உணர்ச்சிப்பூர்வமாக தனது ஆதரவை பதிவு செய்துள்ளார்.