ஐதராபாத்,
டிராகன் படப்பிடிப்பில் காயமான ஜூனியர் என்.டி.ஆருக்கு ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் (KIMS) மருத்துவமனையில் தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. 2 முதல் 3 மாதங்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். தற்போது ‘கே.ஜி.எஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
‘டிராகன்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஜூனியர் என்டிஆருக்கு எதிர்பாராத விதமாக தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் (KIMS) மருத்துவமனையில் ஜூனியர் என்டிஆருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், அவர் முழுமையாக குணமடைந்து 2 முதல் 3 மாதங்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் ஜூனியர் என்டிஆர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்கள் அனைவரிடமிருந்தும் கிடைத்த அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் நான் நெகிழ்ந்து போயுள்ளேன். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. நான் நலமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த சிறந்த மருத்துவர்கள் குழுவினருக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ள ஜூனியர் என்டிஆர், தனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் ஆதரவு தனக்கு ஒவ்வொரு நாளும் வலிமை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். “உங்கள் ஆதரவு எனக்கு ஒவ்வொரு நாளும் வலிமை அளிக்கிறது. விரைவில் சந்திப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜூனியர் என்டிஆரின் உடல்நிலை குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவர் விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.