சினிமா செய்திகள்

‘வேட்டுவம்’ படத்தில் கேமியோ வேடத்தில் ஸ்ருதிஹாசன்?

பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ், சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘வேட்டுவம்’ திரைப்படம்

‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித், கடைசியாக ‘தங்கலான்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது ‘வேட்டுவம்’ என்ற புதிய படத்தை எழுதி இயக்கி வருகிறார்.

நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர். மேலும், அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை சோபிதா துலிபாலா கதாநாயகியாக நடிக்கிறார்.

கேங்ஸ்டர் கதையில்

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் அறிவியல் புனைவு அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு நிறைவடைந்ததாக ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில், சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் ‘வேர்ட் ஆப் வேட்டுவம்’ (Word of Vettuvam) என்ற வீடியோ வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கேமியோவில் ஸ்ருதிஹாசன்?

இந்த நிலையில், ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், இப்படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT